Thursday, February 11, 2010

பிசினஸ் சக்சஸ் குளறுபடிகள்

பிசினஸ் சக்சஸ் குளறுபடிகள்

சாதாரண பெட்டிக்கடைகளில் ஆரம்பித்து பல கோடிகளை குவிக்கும் கோடீஸ்வரர்கள் வரை அனைவருமே செய்யும் தொழில் என்னவென்று கேட்கப்படும்போது பிசினஸ் என்று ஒரே வார்த்தையில் கூறி விடலாம். பெரிய ஜாம்பவான்களான டாடா, பிர்லாவில் ஆரம்பித்து வெற்றி சிகரத்தை எட்டிப்பிடித்த பலரையும் தொடர்ந்து கதைகள் வாயிலாகவும், சிறந்த கட்டுரைகள் மூலமும் இளைய சமுதாயம் தெரிந்துகொண்டு வருகிறது. பிசினஸ் தொடங்கும் பலருக்கும் தானும் டாடா, பிர்லா ஆக வேண்டுமென்பதே நினைப்பு. சிறந்த முன்மாதிரிதான்.

ஆனால் இப்படி வெற்றி சிகரத்தை அடைந்தவர்கள் அனைவருமே எத்தனையோ இலட்சத்தில் ஒருவராக இருப்பர். பாசிடிவ் எண்ணம் தேவை என்பதால் சில முன்மாதிரிகளாக வெற்றியடைந்தவர்கள் வெளிச்சம் போட்டு காட்டப்படுகின்றனர். இருந்தாலும் பிசினஸ் ஆரம்பிக்கும் முன் பொதுவான சில எதிர்மறை தன்மைகளை தெரிந்து கொண்டால் எதிர்நோக்கவிருக்கும் ஏற்ற இறக்கங்களிருந்து தன்னை பாதுகாத்துகொள்ளும் தெளிவும் இளைய சமுதாயத்திற்கு கிடைக்கும். பிசினஸிற்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு ஆரம்பித்தால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

ஆரம்பிக்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட அடிப்படை காரணிகள் அனைத்து பிசினஸிற்கும் பொருந்தும்.

1.சிறிய தொழிலாக இருக்கும் பட்சத்தில் ஆரம்ப கால கட்டங்களில் வேலைக்கு நிறைய ஆட்களை நியமிப்பதை குறைத்து கொண்டு தான் வேலை செய்து வர்த்தகம் பெருக வேண்டும் என்பது தான் முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

2.செய்யப்போகும் புதிய தொழிலின் மீது அளவு கடந்த ஆர்வமும் அக்கறையும் இருப்பது நல்லது.

3.உற்பத்தி செய்யக்கூடிய பொருளோ அல்லது சேவையோ மக்களின் உண்மை தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தால் மிகவும் நல்லது.

4.தெளிவான குறிக்கோள் , பொறுமை, பாசிடிவ் மனப்பான்மை மூன்றும் மிக அவசியமான தொழிலை வளம்பெறச் செய்யும் காரணிகள்.

5.தோல்விகள் நம்மை தோற்கடிக்க முடியாது என்ற எண்ணமும் அதே நேரத்தில் தோல்விகளின் மூலம் கற்றுக கொள்ளும் மனப்பக்குவமும் இருந்தாலே 50 சதவிகித வெற்றி தான்.

6.கூட்டுத் தொழில் துவங்க இருப்போர் தங்கள் பிசினஸ் பார்ட்னரை தெரிவு செய்வதில் மிகுந்த அக்கறையும் கவனமும் செலுத்துவது மிகவும் முக்கியம். பார்ட்னர்களால் ஏமாற்றப்பட்ட பல கதைகள் நாம் அறிந்ததே.

மேலாண்மை குறைபாடுகள்

பல தொழில்கள் துவங்கிய சில நாட்களிலேயே முடங்கி போவதுற்கு முக்கிய காரணம்
மேலாண்மை குறைபாடுகளே. வர்த்தக உரிமையாளர்கள் தங்கள் கவனத்தை தொழில் அபிவிருத்தியின் முக்கிய தூண்களான பணம், கொள்முதல், விற்பனை, உற்பத்தி மற்றும் திறமையான ஊழியர்களை தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றில் செலுத்துவது மிகவும் சிறந்தது.

போதிய பணமின்மை

பிசினஸ் செய்ய நினைக்கும் சிலர் செய்யும் முக்கிய தவறு தான் செய்யப்போகும் வர்த்தகத்திற்கான தொகையை குறைத்து மதிப்பிடுவது. பிசினஸ் தொடங்குவதற்கு மட்டுமில்லாமல் அதில் நிலைத்து நிற்பதற்கான பணத்துடனும் தொழில் தொடங்க வேண்டும். உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு சந்தை நிலவரங்கள் கை கொடுக்குமா. விற்பனை மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை முன்னரே சரியாக கணக்கிட முடியாது.
உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மக்களை சென்றடைய சிறிது காலம் பிடிக்கலாம்.

இடத்தெரிவு

எங்கு பிசினஸ் தொடங்க போகிறோம், என்ன பிசினஸ் செய்ய போகிறோம், நாம் தெரிவு செய்திருக்கும் இடம் நம்முடைய வர்த்தகத்திற்கு பொருத்தமான இடம் தானா என்பது போன்ற சில ஆராய்ச்சி வேலைகளை தொடங்கும் முன் கருத்தில் கொள்வது நல்லது.

அகலக்கால்

பிசினஸ் தொடங்கும் பலர் சிறு வெற்றிகளுக்குப் பின் தொழிலை பெரிய அளவில் விரிவுபடுத்துவதும் அதில் அனைத்தையும் இழந்து விடுவதும் காலங்காலமாக நடைபெறுகிறது. இருக்கும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதை தீவிர யோசனைக்குப்பின் சிறிது சிறிதாக செய்ய வேண்டுமே தவிர ஒரேயடியாக அகலக்கால் வைத்தல் கூடாது.

இவை போன்ற சில காரணிகளையும் மனதில் கொண்டு தெளிவான திட்டமிடுதலுடனும் , பாசிடிவ் மனப்பான்மையுடனும் , நாம் பிறருக்கு முன் மாதிரியாக வர வேண்டும் என்று நினைத்து தீவிர செயலாற்றினால் வெற்றி எட்டிப் பிடிக்கும் தூரத்தில் தான்.


- OKV

5 comments:

  1. கோனார் நோட்ஸ் மாதிரி கிடக்கு...?

    ReplyDelete
  2. அன்புள்ள வேணி,

    உங்கள் வர்த்தக வழிமுறை இலக்கணம் தெளிவாக, நுணுக்கமாக, சிறப்பாக‌ உள்ளது. இந்த இளம் வயதில் இப்படி அனுபவம் மூலமாக எப்படி உங்களால் எழுத முடிகிறது ?

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்.

    ReplyDelete
  3. நல்ல பதிவு....... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நம்பிக்கை தரும் பதிவு. நன்றாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. கோனார் நோட்ஸ் என்று எழுதின ஆள் கட்டுரையை வாசிக்கவில்லை போலும்.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete