Saturday, January 23, 2010

துபாய் நேற்று இன்று நாளை







அரசின் ஆடம்பர செலவுகள் - தீர்வு எங்கே?

ஆடம்பரமாய் செலவழிக்கப்படும் பல லட்சம் கோடிகள் - தீர்வு யார் கையில்??

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, குண்டும் குழியுமான சாலைகள், வேளாண் உற்பத்திக்குறைவு, நஷ்டப்படும் விவசாயிகள், கிராமாப்புற கல்வி மற்றும் சுகாதார மேம்பாடு, தரமான உயர் கல்வி கூடங்கள், வேலையில்லாத்திண்டாட்டம், லஞ்ச ஒழிப்பு இவை எல்லாவற்றையும் ஓரந்தள்ளி விட்டு நம் நாட்டின் பல மாநிலங்களில் அரசுகள் தங்களால் முடிந்தவரை கோடிகளை ஆடம்பரமாய் அள்ளி வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. எதில் போட்டி இருக்கிறதோ இல்லையோ நம் நாட்டில் அரசியல் கட்சிகள் பணம் சுருட்டுவதிலும், ஆடம்பரமாய் செலவழிப்பதிலும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதை தவறாமல் நிரூபித்தும் வருகின்றன. இதற்கு காரணம் யார் அரசியல்வாதிகளா??
இன்று விலைவாசி பன்மடங்கு உயர்ந்து எந்த பொருள் வாங்கினாலும் தலை சுற்றுகிற அளவிற்கு போய் விட்டது. ஆனால் விலைவாசி உயர்விற்கேற்ற அளவிற்கு ஊதிய உயர்வு யாருக்கும் இல்லை. சில குறிப்பிட்ட துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு மட்டுமே இதையெல்லாம் தாங்க கூடிய அளவிற்கு ஊதியம் உள்ளது. மற்றவர்கள் பாடு சங்கடமாகவே உள்ளது.
மாநில மாவட்ட தலைநகர நெடுஞ்சாலைகள், முக்கிய அரசியல் வாதிகளின் குடியிருப்பு அருகில் உள்ள சாலைகளில் மட்டுமே அரசுகள் ஓரளவிற்கு அக்கறை காட்டுகின்றன. கிராம மற்றும் நகர்ப்புற சாலைகளில் மக்கள் பயணிக்கவே முடியாத அளவிற்கு குண்டும் குழியுமான சாலைகளும், ஒரு தடவை வாகனம் சென்று வந்தாலே அதை பணிமனைகளில் சென்று விட வேண்டும் என்ற நிலையில் உள்ள சாலைகளும் ஏராளம். வேறு வழியின்றி மக்கள் இதிலும் பயணித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்.
நம் நாட்டில் 25 % விளைநிலங்கள் பயன்பாட்டிற்கு உகந்தவையாக இல்லை என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சமீபத்தில் இஸ்ரோ செயற்கைக்கோள் மூலம் அறிந்து அம்பலப்படுத்தியுள்ளது. உணவு பொருட்களை ஏற்றுமதி செய்த நாம் இருக்குமதி செய்யுமளவிற்கு வேளாண் துறை நசிந்துள்ளது. விவசாயிகள் சிலரை தேர்ந்தெடுத்து பாலைவனங்களை சோலைவனங்கலாக்கிய நாடுகளை பார்வையிட சொல்லும் அரசுகளுக்கு அந்த நாடுகள் இந்த நிலையை அடைய என்ன செய்தன, வேளாண்துறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்பட்டது என்பதை அறிந்து செயல்படுவதில் அக்கறை இல்லை. மிகவும் சுகாதாரமான சில நாடுகளை சென்று பார்த்துவிட்டு இங்கேயும் அதை செயல்படுத்தப் போகிறோம் என அறிவிக்கும் முன் சில அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். குப்பையை கீழே போடாதே, எச்சில் துப்பாதே என அறிவிக்கும் முன் அதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்து விட்டோமா அதை முறையாக பராமரிப்பது எப்படி என்பதை எல்லாம் சிந்தித்து செயலாற்றிவிட்டு அறிவிக்க வேண்டும். இங்கு வெறும் அறிக்கையில் மட்டுமே அரசியல் நடந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய கேலிக்குரிய விஷயம்.
கிராமபுறங்களில் உள்ள கல்வி கூடங்களின் நிலையை ஆய்வு செய்து நகர்புற மாணவர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி அங்கும் கிடைக்க வழிவகை செய்தாக வேண்டும். பல கிராமங்களில் பெயரளவில் மட்டுமே கல்வி கூடங்கள் இயங்குகின்றன. அலுவலக பணியில் தொடங்கி அனைத்து அரசு பணிகளிலும் நியமனத்தில் 80 % லஞ்சம் மூலமே நடைபெற்று வருகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மையே. தகுதி திறமைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
கல்வி கொள்ளை லாபம் சம்பாதிக்க பயன்படும் தொழிலாக பார்க்கப்படுவதால் உயர் கல்விக்கான தரமான கல்வி நிறுவனங்களின் பற்றாக்குறை காரணமாக ஆண்டுதோறும் பல லட்சம் மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிக்கின்றனர். முடிந்தவரை இந்த எண்ணிக்கையை குறைக்கலாம்.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லாத கிராமங்கள் ஏராளமாக இருக்கின்றன. இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கிராமங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளையும் உருவாக்கி தர வேண்டும். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முதல் பல அரசின் திட்டங்களும் 75 % அறிக்கைகளில் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவை போன்ற பொதுவாக மக்களுக்கு நலனளிக்கும் விஷயங்கள் ஏராளம் செய்யப்படாமல் உள்ளன.
இப்படி கவனம் செலுத்த வேண்டிய பணிகள் ஆயிரம் இருந்தும் அதை எல்லாம் விட்டு விட்டு கோடிக்கணக்கில் செலவழித்து தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதும், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்கள் பணத்தை அள்ளி வீசுவதும், பல கோடிகள் செலவழித்து மாநாடு நடத்துவதும் ஏன்? தமிழ் மக்களின் மீது அக்கறை இல்லாமல் மொழியை எப்படி வளர்க்க முடியும். அந்தந்த மொழி பேசும் மக்கள் நன்றாக இருந்தாலே மொழியும் வளரும். மொழியை மற்றும் காப்பாற்றி என்ன செய்ய போகிறோம்?. இவ்வித மாநாடுகளால் சாமானிய மனிதனுக்கு என்ன பயன்?. தமிழ் மாநாடுகள் நடத்துவதில் இரு வேறு கருத்துக்கள் யாருக்கும் இல்லை. குறைந்த செலவில் அறிஞர்களை வைத்து நடத்த வேண்டும் என்பது தான் ஓட்டு மொத்த சாமானிய தமிழனின் விருப்பமும் கூட.
இதையெல்லாம் கேள்வி கேட்க வேண்டிய மக்கள் வேறுவழியில்லாமல் பணத்திற்காக வாக்களிக்க தயாராகி விட்டனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. இதெல்லாம் தடுக்க இளைய தலைமுறை முயல வேண்டும். மக்கள் சக்தி மகத்தானது. மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கேள்வி கேட்க ஆரம்பிக்காத வரை அரசியலில் ஆடம்பரம், அவரவர் சுயநலத்திற்காக தனி மாநில கோரிக்கைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். இதற்கெல்லாம் விடிவு காலம் மக்கள் கையில் குறிப்பாக இளைஞர்கள் உள்ளது. சிந்திக்குமா இளைய தலைமுறை??

- OKV