Monday, September 20, 2010

" The Hindu " தேசிய நாளிதழின் பொறுப்பற்ற செயல் - ஒரு மோசமான முன்னுதாரணம்

" The Hindu " தேசிய நாளிதழின் பொறுப்பற்ற செயல் - ஒரு மோசமான முன்னுதாரணம்


விளம்பரத்திற்காக தங்கள் நிறுவன பொருட்களை ( ஷாம்பூவில் ஆரம்பித்து.......) ஒரு சிறிய பாக்கெட்டில் போட்டு அச்சில் வெளிவரும் பத்திரிக்கைகளின் வாயிலாக அனுப்புவது தமிழ் நாட்டில் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதை எல்லாம் மிஞ்சி விட்டது மிகப் பெரிய தேசிய நாளிதழ் எனக் கூறப்படும் " The Hindu ". இன்று காலையில் திடிரென செய்தித்தாளை படிக்க ஆரம்பித்த போது அதிர்ச்சி ஏற்பட்டது. திடிரென யாரோ பேசுவது போன்ற சப்தம் செய்தித் தாளில் இருந்து வருகிறது. செய்தித்தாள் முழுதும் தேடிப் பார்த்தால் " மெட்ரோ பிளஸ் " எனப்படும் அதிகப்படியான பக்கங்களின் கடைசி பக்கத்தில் வந்துள்ள ஒரு கார் விளம்பரத்தில் அது குறித்த விபரங்கள் பேச்சு வடிவில் இணைக்கப்பட்டுள்ளது.

எளிதாக அதை தனியாக நாளிதழில் இருந்து பிரித்தெடுக்கவும் முடிகிறது. அதன் உள்ளே ஒரு சிறிய பாட்டரியும் , சர்க்கியூட்டும் பொருத்தப்பட்டுள்ளது. இது வெறும் விளம்பரமே என்பது ஒரு புறமிருக்க தேசிய அளவில் பல மக்கள் வாசிக்கக் கூடிய செய்தித்தாள்கள் சிறிதும் பொறுப்பின்றி இது போன்று விளம்பரங்களில் சர்க்கியூட்டுக்களை இணைத்து வெளியிடலாமா என்ற கேள்வி தான் முதலில் தோன்றுகிறது. இந்தியாவிற்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதென்று பல மேலை நாடுகள் கூறி வரும் வேளையில் இது போன்ற பொறுப்பற்ற நடவடிக்கைகள் தேவையா.

அந்த விளம்பரத்தில் வைக்கப்பட்டுள்ள அனைத்து ஒலிப்பான்களையும் சோதனை செய்து பார்த்ததா தி ஹிந்து. சிறிய குழந்தை கூட அதை தனியாக எடுத்து விட்டு அதற்குள் எதையும் வைக்கக் கூடிய அளவிலே இருக்கிறதே இது இரு மிகப் பெரிய குறைபாடில்லையா. தவறு செய்பவர்களும் வன்முறையில் ஈடுபடுபவர்களும் பயன்படுத்தும் பல அதி நவீன சாதனங்கள் தொழில் நுட்பத்தினால் சுருங்கி வரும் கால கட்டங்களில் ஒரு சர்க்யூட்டை உள்ளே வைக்கும் அளவிற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளதே " தி ஹிந்து " . யோசிக்க வேண்டாமா???

நம் நாட்டில் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கடுமையாக இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணம். என்றைக்கு முதன் முதலாக விளம்பரத்திற்காக பொருட்களை பாக்கெட்டில் போட்டு கொடுத்தார்களோ அப்பொழுதே கண்டித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சில வாரப் பத்திரிக்கைகள் பத்திரிக்கையின் விலையை விட பல மடங்கு விலை அதிகமான பொருட்களை பாக்கெட்டில் போட்டு விளம்பரப்படுத்துவதையே தொழிலாக வைத்துள்ளன என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆனால் ஹிந்து போன்ற ஒரு தேசிய நாளிதழ் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் பொறுப்பற்ற ஒரு செயல் என்பதை கூறிக் கொள்வதோடு ஹிந்து நாளிதழை தினமும் வாசிப்பவர் என்ற முறையில் இது போன்ற செயல்களுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.