Tuesday, March 24, 2009

தமிழ்நாட்டில் விவசாயம் Tamil Nattil Vivasayam

அலங்கார அறிவிப்புக்களும் விவசாயிகளின் பரிதாப நிலையும்

மண்ணின் வளமே மக்கள் வளம், விவசாயமே எங்கள் பிரதான தொழில், உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் நாடு என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நாம் இன்று அயல் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து உணவை உண்கிறோம். இதே நிலைமை நீடிக்குமானால் நம் எதிர்காலச் சந்ததியினர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் ஏராளம். இறக்குமதி செய்து பதப்படுத்தப்பட்ட உணவுகளையே பல மடங்கு விலை கொடுத்து வாங்க வேண்டிய பரிதாப நிலைக்குத் தள்ளப்படுவர். இப்பொழுதே அதற்கான அஸ்திவாரத்தையும் போட்டாயிற்று.

இன்று அனைத்து அரசியல் கட்சிகளும் அவரவர் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் ஆயுதம் விவசாயம் என்றாகி விட்டது. ஆனால் எந்த அரசும் உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாக தெரியவில்லை. அரசின் அவசியமில்லாத இந்த அறிவிப்புக்கள் விவசாயிகளுக்கு உண்மையில் எந்த பயனையும் அளிக்கப் போவதில்லை. வெளிப்படையான மக்கள் பார்வைக்கு ஏதோ அரசு விவசாயிகள் நன்மைக்காக பல அறிவிப்புக்களை செய்வதாக காட்டிக் கொள்ளும் படம் தான் இது.

எவ்வளவோ கோடி கடன்களை பல தொழிலதிபர்கள் திரும்பி செலுத்தாமலிருந்தும் அதை பற்றி எல்லாம் கண்டு கொள்ளாத அரசாங்கமும் வங்கிகளும் விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமென்ன?. இதில் கேலிக்குரிய விஷயம் அரசு விவசாயத்திற்காக கோடிக்கணக்கில் கடன் வழங்குவதாக அறிவிக்கிறது . எந்த அளவிற்கு அது விவசாயிகளை சென்றடைந்துள்ளது அல்லது பயனளித்துள்ளது? அதை வாங்குவதில் விவசாயிக்கு உள்ள சிரமங்கள் என்ன என்பதை யாரும் எண்ணிப் பார்த்ததாக தெரியவில்லை. அரசு அறிவிக்கும் திட்டங்களில் 10 சதவிகிதம் கூட உண்மையில் விவசாயிகளை சென்றடைவதில்லை. வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பி செலுத்தும் அளவிற்கு வருமானம் இருக்குமானால் எந்த விவசாயியும் வரி செலுத்துவதை பற்றியோ வட்டி செலுத்துவதை பற்றியோ யோசிக்க கூட போவதில்லை.

விவசாயத்தை பொருத்தவரை சில விஷயங்களை எண்ணிப் பார்த்தாக வேண்டும். விவசாயம் என்பது இயற்க்கை சார்ந்த தொழில். இயற்கையை வெல்லும் அதிசய சக்தி யாருக்கும் இல்லை. மேலும் விவசாயிகளை முழுவதுமாக இடம் பெயரச் செய்து வேறு தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் முடியாது. மனிதனின் மிக முக்கிய தேவை உணவு தான். அதற்கு முக்கியத்துவம் தர வேண்டியது சாதி, மத, இன பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையும் கூட.

இனியாவது வரிகுறைப்பு, வட்டிகுறைப்பு போன்ற கவர்ச்சியான அறிக்கைகள் அரசியல் சுய லாபங்களுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் விவசாயம் பற்றி பேசுவதையும் நிறுத்தி விட்டு விவசாயிகள் நலன்களுக்காக பாடுபட எந்த அரசாவது முன் வருமா? மிகச் சிறிய நாடுகள் மற்றும் பாலைவனமாக இருந்த நாடுகள் கூட தன்னிறைவை எட்டி விட்டன. ஆனால் இங்கு எல்லாமே வெறும் பேச்சளவில் மட்டுமே உள்ளது. விவசாயிகளிடத்தில் ஒற்றுமை இருப்பின் அனைத்தும் சாத்தியமே. சிந்திப்போம். செயல்படுவோம்.
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ற பாடல் வரிகளை உண்மையாக்க பாடுபடுவோம்.

- OKV